நிடத நாட்டு அரசன் நளனுக்கு ஏழரைச் சனி பிடித்ததால் அவன் அரச பதவி உள்ளிட்ட அனைத்து சுகங்களையும் இழந்து, இத்தலத்துக்கு வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி தனது தோஷம் நீங்கப் பெற்றான். நளன் வழிபட்டதால் 'நள்ளாறு' என்று பெயர் பெற்றது. முதல் யுகத்தில் 'ஆதிபுரி' என்றும், இரண்டாம் யுகத்தில் 'தர்ப்பாரண்யம்' என்றும், மூன்றாம் யுகத்தில் 'விடங்கபுரம்' என்றும், நான்காம் யுகத்தில் 'நாளேஸ்வரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து மூலவர் 'தர்ப்பாரண்யேஸ்வரர்', கோரைப்புல்லை சேர்த்துக் கட்டியது போன்ற லிங்க மூர்த்தி. தர்ப்பை - கோரைப்புல். அம்பிகை 'போகமார்த்த பூண்முலையாள்' என்றும் 'பொற்கொடியம்மமை' என்றும் அழைக்கப்படுகிறாள். அழகிய சிறிய வடிவம். உள்ளே நுழைந்தவுடன் அம்மன் சன்னதி உள்ளது. அருகில் கிழக்கு நோக்கி சனீஸ்வரர் சன்னதி உள்ளது.
பிரகாரத்தில் சொர்ண விநாயகர், கற்பக விநாயகர், நாகராஜன், நாக கன்னிகை, வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், பைரவர், அறுபத்து மூவர், இடையன், இடைச்சி சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு பால் கொடுத்த இடையனை ஏமாற்றி பொய் கணக்கு எழுதிய கணக்கன் ஒருவனை கொல்வதற்காக சுவாமி சூலாயுதம் விட்டதால் நந்தியும், பலிபீடமும் சற்று தள்ளி இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிவபெருமான் ஏழுவகை நடனமாடிய சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலம் நாகவிடங்கத் தலம். இங்கு ஆடிய நடனம் உன்மத்த நடனம். திருவாரூர், திருக்கோளிலி, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன.
திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் அனல் வாதம் செய்தபோது, இத்தலத்தில் பாடப்பட்ட பதிகமான 'போகமார்த்த பூண்முலையாள்' என்னும் பதிகத்தைத்தான் தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் இருந்ததால் இப்பதிகம் 'பச்சைப் பதிகம்' என்று பெயர் பெற்றது.
இத்தலத்தில் நளன் உண்டாக்கிய தீர்த்தம் வடக்கு மாடவீதியில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள குளம் சரஸ்வதி தீர்த்தம். அகத்திய தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.
திருமால், பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், வசுக்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காசியபர், அருச்சுனன், நளன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். வைகாசி மாத தீர்த்தவாரி நிகழ்ச்சியில் இந்த இடையன், இடைச்சிக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த நிகழ்வு நடைபெறுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் நான்கு பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|